ஜூம் செயலிக்குப் போட்டியாக மெஸஞ்சர் ரூம்ஸ்: ஃபேஸ்புக் புதிய முயற்சி
ஜூம் செயலிக்குப் போட்டியாக மெஸஞ்சர் ரூம்ஸ்: ஃபேஸ்புக் புதிய முயற்சி
ஒரே நேரத்தில் 100 பேர் வரை வீடியோ கான்ஃபரன்ஸில் கலந்துகொள்ளும் வசதி கொண்ட ஜூம் செயலிக்குப் போட்டியாக, ஃபேஸ்புக் நிறுவனம் மெஸஞ்சர் ரூம்ஸ் என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதில் எந்த நேரக் கட்டுப்பாடும் இன்றி ஒரே நேரத்தில் 50 பேர் வரை கலந்துகொண்டு பேச முடியும்.
மெஸஞ்சர் அல்லது ஃபேஸ்புக் மூலம் ரூம் என்ற வசதியை இயக்கலாம். ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்காதவர்களையும் இந்த அழைப்பில் சேர்த்துக்கொள்ள முடியும். எந்தப் புதிய மென்பொருளையோ, செயலியையோ புதிதாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. மொபைல் எண் மூலமாகவோ, கணினி மூலமாகவோ இந்த உரையாடலில் இணைய முடியும். மேலும் இந்த உரையாடலில் இருக்கும்போதும், பயனர்கள் தங்களது பக்கத்தில், குழுக்களில், பக்கங்களில் பதிவிடலாம்.
உங்களது நண்பர்களோ, குழுக்களோ ரூம்ஸ் வசதியை இயக்கி உங்களை வரவேற்றால் அதுவும் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் உங்களுக்குத் தெரியவரும். இந்த வாரம் அமெரிக்காவில் அறிமுகமாகும் இந்த வசதி, அடுத்தடுத்து மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
கோவிட்-19 நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்து, ஒரு நாளைக்கு 70 கோடி கணக்குகள் வாட்ஸ் அப்பிலும், மெஸஞ்சரிலும் அழைப்புகளைப் பயன்படுத்துகின்றன. தற்போதைய சூழலால் பல்வேறு நாடுகளில், மெஸஞ்சர் மற்றும் வாட்ஸ் அப்பில் வீடியோ கால் செய்பவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
இன்னொரு பக்கம், வாட்ஸ் அப்பில் வீடியோ காலிங் வசதியில் இனி 8 பேர் வரை குழு அழைப்பில் பங்குபெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் இருந்தது போலவே இந்த அழைப்புகள் முழு பாதுகாப்புடன் இருக்கும் என்றும், வாட்ஸ் அப் உள்ளிட்ட யாராலும் இதை ஒட்டுக் கேட்க, பார்க்க முடியாது.
Comments